செவ்வாய், 17 ஜூன், 2014

செயற்கைக்கோள் எவ்வாறு ஏவப்படுகிறது ?

சுயமாக ஒரு செயற்கைக்கோளை கட்டமைத்து, அதனை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும் திறன் படைத்த நாடுகளின் தரவரிசைப்பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக IRNSS (Indian Regional NavigationalSatellite System) என்ற திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ செயல்படுத்திவருகிறது.

Posted Image

7 செயற்கைக்கோள்கள் அடங்கிய இந்த திட்டத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி 'IRNSS 1 A' என்ற செயற்கைக்கோளை இரவு நேரத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது செயற்கைக்கோளை ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்த திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும், அதன் நோக்கம் குறித்து பார்க்கலாம்.

IRNSS என்ற திட்டமானது முழுக்க முழுக்க போக்குவரத்து வழித்தடத்திற்காக ரூ.1420 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் 2015 ஆம் ஆண்டின் இறுதிக்குள் படிப்படியாக விண்ணில் நிலை நிறுத்தப்படும், இதற்காக ஒவ்வொரு செயற்கைக்கோளை உருவாக்கவும் தலா ரூ. 125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் கப்பல், மற்றும் விமான போக்குவரத்திற்கான வரைபடங்களை தயாரிப்பதோடு, அவற்றை நாட்டின் எந்த மூலையில் இருந்து கண்காணிக்கவும் இந்த திட்டம் பயன்படவுள்ளது. இந்த திட்டத்தின் இரண்டாவது செயற்கைக்கோளானது, PSLV C-24 மூலமாக அனுப்பப்பட்டுள்ள்ளது.


தொடர் வெற்றியில் PSLV

இந்தியாவைப் பொறுத்தளவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இரண்டு வகையான ஏவூர்திகளை பயன்படுத்தி வருகிறோம். அவை GSLV, PSLV இவற்றில் PSLV-யைப் பொறுத்தளவில் இது 26 வது முயற்சி.

இதில் ஏற்கனவே 24 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்தியா, சமீபகாலமாக PSLV-யின் நவீன ரகமான PSLV “XL” வகை ஏவூர்திகளை பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக PSLV C-11ஐ பயன்படுத்தி சந்திரனுக்கு சந்திராயனையும், PSLV C-25ஐ பயன்படுத்தி செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யானையும் செலுத்திய இஸ்ரோ, மற்ற தகவல் தொடர்பு பயன்பாட்டிற்கான செயற்கைக்கோள்களையும் அனுப்பியுள்ளது.
கடந்த முறை விண்ணில் செலுத்தப்பட்ட IRNSS 1 A செயற்கைக்கோளை தாங்கிச் சென்ற PSLV C-22 ஏவூர்தியும் XL வகையைச் சேர்ந்ததுதான். இந்த தொடர் வெற்றிகளின் அடுத்த கட்டமாக தற்போது விண்ணில் பாயவுள்ள PSLV C-24 ஏவூர்தி 320 டன் எடையும் 44 மீட்டர் உயரமும் கொண்டது. 4 அடுக்குகளைக் கொண்ட இந்த ஏவூர்தியில் திட மற்றும் திரவ எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

“IRNSS 1 B” செயற்கைக்கோள்
Posted Image

PSLV C-24 ஏவூர்தியின் 4வது தளத்தில் செயற்கைக் கோள் பொருத்தப்பட்டிருக்கும், 1432 கி.கி எடையுள்ள 2வது செயற்கைக்கோளில் மொத்தம் இரண்டு சோலார் இறக்கைகள் பொறுத்தப்பட்டுள்ளன, ஏவூர்தி ஏவப்பட்ட 1225.4வது விநாடியில் ஏவூர்தியில் இருந்து செயற்கைக்கோள் விடுவிக்கப்பட்டதும், படிப்படியாக அதன் தொலைவு அதிகரிக்கப்படும்.
இறுதியாக பூமியிலிருந்து குறைந்த பட்சமாக 284 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 20,652 கி.மீ தொலைவிலான நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும், செயற்கைக்கோளின் இருபுறங்களிலும் இணைக்கப்பட்டுள்ள இரண்டு இறக்கைகளும் விரிந்து செயற்கைக்கோளுக்குத் தேவையான 1660 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும். இதுமட்டுமல்லாமல், IRNSS 1 B” செயற்கைக்கோளில் தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவதற்காக சிறப்பு ஆன்டெனாக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

எவ்வாறு ஏவப்படுகிறது ?

Posted Image

IRNSS 1 B செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தப் பயன்படும் ஏவூர்தியான PSLV C-24 ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் கட்டமைக்கப்பட்டு, செயற்கைக் கோளும் பொருத்தப்பட்டு தயாராக இருக்கிறது. இந்த ஏவுதளத்தைப் பொறுத்தளவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய 5 மாடி கட்டிடம் உயரம் கொண்ட இந்த ஏவுதளம், நகரும் வகையிலும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படா வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 56.30 மணி நேர கவுன்ட் டவுன் (count down) நேரத்தில் ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருட்களை நிரப்புதல், ராக்கெட் செல்லும் பாதையைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளும், ராக்கெட்டை ஏவுவதற்கான ஆயத்தப்பணிகள் என அனைத்துப் பணிகளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதன்மை கட்டுப்பாட்டு அறையில்தான் நடைபெறும். கவுன்ட் டவுன் நிறைவடைந்ததும், விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்டின் முதல் தளம் 115வது நொடியிலும், இரண்டாவது தளம், 266வது நொடியிலும், மூன்றாவது தளம், 521.4வது நொடியிலும் பிரிந்துவிடும்.
இறுதியாக 4வது தளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்ட 1225.4வது நொடியில் செயற்கைக்கோள் தனியாக பிரிந்து பூமியை சுற்ற ஆரம்பித்துவிடும் இதற்கான கட்டளைகள் அனைத்தும், முதன்மை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பிறப்பிக்கப்படும், இதனையடுத்து கர்நாடக மாநிலம் ஹசன் என்ற இடத்தில் உள்ள செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டிற்கு IRNSS 1 B வந்துவிடும். பின்னர் படிப்படியாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

இதனால் என்ன பயன் ?

இந்த திட்டம் இரண்டு முறைகளில் நமது போக்குவரத்து வழித்தடங்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று, நிலையான போக்குவரத்து வழித்தடத்திற்காகவும், மற்றொன்று இராணுவப் பயன்பாட்டிற்காகவும் என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பயன்பாடுகள்:

1. இந்தியாவின் எல்லையில் இருந்து 1500 கி.மீ சுற்றளவில் இந்த திட்டம் பயன்பாட்டில்  
இருக்கும். இதன் மூலம் கப்பல்களின் பாதை மாறாமல் தடுக்க முடிவதோடு சரியான 
 பாதையில் செல்வதற்கும் பயன்படும்.

2. புயல், கடும் மழை, சுனாமி உள்ளிட்ட மோசமான வானிலையிலும் கூட கப்பல்களை 
 தொடர்புகொள்ளவும், மீட்பு பணிகளில் ஈடுபடுத்தவும் பயன்படும்.

3. தரை போக்குவரத்தைப் பொறுத்தளவில், GPS என்றழைக்கப்படும் வழித்தட சேவையை  
மேலும், மேம்படுத்தும் வகையில் வாகன ஓட்டுநருக்கு ஒலி மற்றும் ஒளி வடிவில்  
வழித்தட தகவல்கள் அளிக்க இந்த செயற்கைக் கோள்கள் பயன்படும்.

4. நாட்டின் இயற்கை மற்றும் அரசியல் வரைபடங்களை நவீன முறையில் தயாரிக்க  
பயன்படும்.
 
இராணுவப் பயன்பாடுகள்:

1. இந்திய எல்லைக்குள் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் குறித்த  
தகவல்களை அறிந்து கொள்ளவும் கண்காணிக்கவும் பயன்படும்.

2. இந்திய நிலப் பகுதியின் எந்த மூலையில் பயணிக்கும் வாகனங்களையும்  
வெறும் 20 கி.மீ உயரத்தில் இருந்து கண்காணிக்க முடியும், இதன் மூலம்  
தீவிரவாதிகளின் போக்கை அறிந்து செயல்பட இராணுவத்திற்கு பயன்படும்.

3. முப்படைகளும் இந்த போக்குவரத்து வழித்தடங்களை கண்காணிப்பதால், 
 நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக