ஜவுளித் துறையில், 'புத்திசாலி ஆடைகள்' சில வந்து அசத்த ஆரம்பித்துள்ளன. கணினி சில்லுகள், மொபைல் செயலிகள் மூலம் இவை இயங்குபவை. ஆனால், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள், நுண்ணுயிரி செல்களை வைத்துத்தைத்த உடைகளை வடிவமைத்துள்ளனர்.
'பயோ பேப்ரிக்' என்று பெயரிடப்பட்டுள்ள
இந்த வகை உடைகள், அணிபவரின் உடல் வெப்பம் மற்றும் வியர்வையை உணரும் திறன் கொண்டவை.
நுண்ணுயிரிகள் கொண்ட துணியை,
சிறு சிறு துளைகள் கொண்ட உடையில் வைத்து ஆராய்ச்சியாளர்கள் தைத்தனர். இதை அணிபவருக்கு வியர்த்தாலோ, உடல் வெப்பம்
கூடினாலோ, இந்த துளைகளை மூடியிருக்கும் துணி லேசாக திறந்துகொள்ளும். இதனால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகை ஆடைத் தொழில்நுட்பம் உடனடியாகப் பயன்படும். மேலும், வெப்பப் பகுதியில் இருப்பவர்களுக்கும் இவை தினசரி உடையாகவும் பயன்படும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உடையில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரிகளை மரபணு மாற்றம் செய்வதன் மூலம், வியர்வை துர்நாற்றம் ஏற்பட்டால், இனிய நறுமணத்தை நுண்ணுயிரிகள் வெளியிடும்படியும் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக