வெள்ளி, 20 டிசம்பர், 2019

அணில்களின் நினைவாற்றல்


      அணில்கள் நினைவாற்றலுக்கு பெயர் பெற்றவை. அவை உணவை எங்காவது பதுக்கி வைத்துவிட்டு, திரும்பவும் அதே இடத்தில் போய் அதை எடுக்கும் திறன் படைத்தவை


       அணில்கள், புதிதாகக் கற்றுக்கொண்ட ஒரு செயலை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டவை என்பதை, இங்கிலாந்தின் எக்செட்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆய்வுக்கூடத்தில், சில சாம்பல் நிற அணில்கள் உணவைப் பெற, சில வேலைகளைச் செய்ய வைத்தனர் விஞ்ஞானிகள். பிறகு, 22 மாதங்கள் கழித்து அதே உத்தி மூலம் உணவைப் பெறுகின்றனவா என்று சோதித்தபோது, சில வினாடிகளில் அந்த அணில்கள் அந்த வேலையைச் செய்து உணவைப் பெற்றுக்கொண்டன. இந்த நினைவாற்றலின் உதவியால் தான் நகர்ப்புறங்களிலும் அணில்களால் உயிர் வாழ முடிகிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வயதானவர்களுக்கு மூளைத் திறன் குறைவதை தடுக்க


       உடற் பயிற்சி செய்வதால், வயதானவர்களுக்கு மூளைத் திறன் குறைவதை தடுக்க முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் வர ஆரம்பித்துள்ளன. 'நேச்சர்' இதழ் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின்படி, மூச்சு வாங்கச் செய்யும் உடற்பயிற்சியால், உடலில் உற்பத்தியாகும், 'கோலின்' என்ற வேதிப்பொருள் மூளைத் திறனை பாதுகாப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதனால், வயதானவர்களின் மூளை செல்கள் அழிவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆடை போல் அணியும், 'ட்ரிப்ஸ்' - IV-WALK

      நோயாளிகளுக்கு, 'ட்ரிப்ஸ்' மூலம் மருந்து செலுத்தும் போது, கூடவே, மருந்து புட்டியை தலைகீழாக தொங்க விடுவதற்கு, ஓர் உலோக ஸ்டாண்டையும் நிறுத்தி விடுவர். வாரக் கணக்கில் ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டியிருந்தால், நோயாளியையும் இந்த ஸ்டாண்டையும் பிரிக்கவே முடியாது.


      இயற்கை உபாதைக்குப் போக வேண்டி இருந்தாலும், கூடவே இந்த ஸ்டாண்டும் வரும். இது போல அவஸ்தையை அனுபவித்த, அலிசா ரீஸ் என்ற டென்மார்க் வடிவமைப்பாளர், இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டிருக்கிறார். அவர் உருவாக்கிய, 'ஐ.வி., வாக்' என்ற ட்ரிப்ஸ் பையை, நோயாளி தன் மேல் உடை போல அணியலாம்.பையில் மருந்துகளை ஊற்றி வைக்கலாம். ஐ.வி., வாக்குடன் இருக்கும் ஒரு மின் பம்ப், மருந்தை குழாய் வழியாக உடலுக்குள் மெதுவாக செலுத்தும். எப்போதும் படுத்தபடியே இருக்க நேரும் நோயாளிகள், ஐ.வி.வாக்கை அணிந்து, சற்று காலாற நடக்க முடிந்தால், சீக்கிரம் குணடைய முடியும் என்கிறார் ரீஸ்.

தோலை தாண்டி பார்க்கும் லேசர் - ஆர்சம்

சொரியாசிஸ் எனப்படும் சொறி நோய் ஏற்பட்டால், அதன் தன்மையையும் வகையையும் தெரிந்து கொள்ள, தோல் மருத்துவர் தனது கண்களைத் தான் நம்ப வேண்டும். ஆனால் ஜெர்மனியிலுள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஜென்ட்ரம் முன்சன் மற்றும் மியூனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், சொரி நோயை துல்லியமாக மதிப்பிட, ஒரு கையடக்க கருவியை உருவாக்கியுள்ளனர்.'ஆர்சம்' என சுருக்கமாக அழைக்கப்படும், 'ராஸ்டர் ஸ்கேன் ஆப்டோ அக்கஸ்டிக் மீசோஸ்கோப்பி' தொழில்நுட்பம் மெல்லிய லேசர் துடிப்புகளை பயன்படுத்துகிறது. லேசர் பட்டதும் தோலின் திசுக்கள் வெப்பமடைந்து, விரிவடைகின்றன. அப்படி விரிவடையும் பகுதி, மீஒலி அலைகளை எழுப்பும். இந்த ஒலியை ஒரு உணரி சாதனம் உள்வாங்கி, தோலின் வடிவமாக திரையில் காட்டுகிறது.ஆய்வுக்கூடத்தில் ஆர்சம் கருவி மூவமான சோதனைகளில், நோயாளியின் தோலின் தடிமன், ரத்தக் குழாய்களின் அடர்த்தி, ரத்தத்தின் அளவு போன்றவற்றை கண்டறிய முடிந்ததாக, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.இந்தக் கருவியை பயன்படுத்துவது எளிது. இதில் வேதிப் பொருளோ, கதிர்வீச்சோ இல்லை என்பதால், பக்க விளைவுகள் கிடையாது. இந்தக் கருவி மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து சொரியாசிசின் தன்மை, தோலின் நிலை போன்றவற்றை துல்லியமாக அறிய, தோல் மருத்துவரால் முடியும் என்கின்றனர் இதை உருவாக்கிய விஞ்ஞானிகள்.

பயோ பேப்ரிக் (நுண்ணுயிரி) ஆடைகள்


ஜவுளித் துறையில், 'புத்திசாலி ஆடைகள்' சில வந்து அசத்த ஆரம்பித்துள்ளன. கணினி சில்லுகள், மொபைல் செயலிகள் மூலம் இவை இயங்குபவை. ஆனால், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள், நுண்ணுயிரி செல்களை வைத்துத்தைத்த உடைகளை வடிவமைத்துள்ளனர்.

'பயோ பேப்ரிக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை உடைகள், அணிபவரின் உடல் வெப்பம் மற்றும் வியர்வையை உணரும் திறன் கொண்டவை. நுண்ணுயிரிகள் கொண்ட துணியை, சிறு சிறு துளைகள் கொண்ட உடையில் வைத்து ஆராய்ச்சியாளர்கள் தைத்தனர். இதை அணிபவருக்கு வியர்த்தாலோ, உடல் வெப்பம் கூடினாலோ, இந்த துளைகளை மூடியிருக்கும் துணி லேசாக திறந்துகொள்ளும். இதனால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.விளையாட்டு வீரர்களுக்கு இந்த வகை ஆடைத் தொழில்நுட்பம் உடனடியாகப் பயன்படும். மேலும், வெப்பப் பகுதியில் இருப்பவர்களுக்கும் இவை தினசரி உடையாகவும் பயன்படும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உடையில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரிகளை மரபணு மாற்றம் செய்வதன் மூலம், வியர்வை துர்நாற்றம் ஏற்பட்டால், இனிய நறுமணத்தை நுண்ணுயிரிகள் வெளியிடும்படியும் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.