திங்கள், 16 நவம்பர், 2015

உங்கள் வயதுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் !



உங்கள் வயதுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் !



முதலீட்டாளர்களை ஐந்து கேட்டகிரியாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு கேட்டகிரியில் வருபவர்களுக்கும் ஏற்ற ஃபண்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

21 முதல் 30 வயதினருக்கு::::::::::::::::::::::
இந்த வயதுக்கு உட்பட்டவர்களிடம் சம்பாத்தியம் நன்றாக இருக்கும். கடன் போன்ற பெரிய பணப் பொறுப்புகள் ஆரம்பித்திருக்காது. கையிருப்பில் பணம் கணிசமாக இருக்கும். அதேசமயத்தில், இருக்கும் பணத்தில் அதிக வருவாயை ஈட்ட விரும்புவார்கள். அதாவது, அதிக ரிஸ்க் - அதிக வருமானம் கேட்டகிரியைச் சார்ந்தவர்கள். இவர்கள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்ட் கேட்டகிரியை நாடிச் செல்லலாம். இந்த வயதினருக்கு ஏற்ற ஃபண்டுகள் இனி:
ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட்;
இந்த ஃபண்ட் தொடர்ச்சியாக நன்றாகச் செயல்பட்டு வருகிறது. இதன் போர்ட்ஃபோலியோவில் 67 சதவிகிதத்துக்கும் அதிகமாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகள் உள்ளன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை முழுக்க முழுக்க நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களைக் கொண்டிருந்த இதன் போர்ட்ஃபோலியோவில் இப்போது, ஸ்டேட் பேங்க், கெயில், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் போன்ற பெரிய நிறுவனப் பங்கு களும் நுழைந்துள்ளது. இந்த ஃபண்ட் மொத்த முதலீட்டை அனுமதிப்பதில்லை. மேலும், எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச மாத முதலீடு ரூ.2,000 ஆகும்.  

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. டிஸ்கவரி ஃபண்ட்;
கடந்த காலத்தில் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்த இந்த ஃபண்ட் ஹவுஸ், கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து ஃபண்டுகளையும் நன்றாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த ஃபண்டின்  போர்ட்ஃபோலியோவில் 68 சதவிகிதத்துக்கும் அதிகமாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஃபண்ட் கடந்த சில மாதங்களாகத் தனது எக்ஸிட் கட்டணத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஆறு மாதத்திற்குள் வெளியேறுபவர்களுக்கு 3 சதவிகித கட்டணத்தையும், 18 மாதத்திற்குள் வெளியேறுபவர்களுக்கு 2 சதவிகித கட்டணத்தையும் வசூலிக்கிறது. இந்த ஃபண்ட் வேல்யூ இன்வெஸ்ட்மென்டை கடைப்பிடிக்கிறது.

31 முதல் 40 வயதினருக்கு::::::::::::::::::::::
இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் திருமணமாகி ஓரிரு குழந்தைகளுடன் இருப்பார்கள். சொந்த வீடு வாங்கியிருப்பார்கள். பொறுப்புகள் சற்று அதிகரிக்கும் வயது இது. இந்த வயதினருக்குப் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க ஆசையிருந்தாலும், பொறுப்புகள் விடாது. ஆகவே, இவர்கள் சிறிதளவு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளிலும், பெரிய அளவில் பெரிய நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யக்கூடிய மல்ட்டி கேப் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இந்த வயதினருக்கு ஏற்ற ஃபண்டுகள் இனி:
பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட்;
கடந்த ஒரு வருடத்தில் பல ஃபண்டுகள் நிஃப்டி குறியீடு தந்துள்ள வருமானத்திற்கு சமமாகத் தந்ததற்கே படாதபாடுபடும் போது, அதையும் மீறி 16.55% வருமானத்தை (நிஃப்டி வருமானம் 9.39%) தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபண்ட் ஃபைனான்ஷியல், எனர்ஜி, மற்றும் டெக்னாலஜி துறைகளில் அதிக முதலீட்டைச் செய்துள்ளது. இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (ஆகஸ்ட் 2002) ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது இன்றைய நிலையில் கிட்டத்தட்ட ரூ.9.50 லட்சமாக இருக்கும். இதன் ஃபண்ட் மேனேஜர் மகேஷ் பட்டீல் ஆவார். இந்த ஃபண்ட் நான்கில் மூன்று பகுதியை பெரிய நிறுவனப் பங்குகளிலும், மீதியை நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்கிறது.

ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ப்ளஸ்;
தனது போர்ட்ஃபோலியோவில் 61 சதவிகிதத்துக்கும் அதிகமாக, பெரிய நிறுவனப் பங்குகளையும், கிட்டத்தட்ட 37 சதவிகிதத்தை நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் (2003-2012), ஓர் ஆண்டைத் தவிர (2009) ஒவ்வொரு ஆண்டும் நிஃப்டி குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் ஆனந்த் ராதாகிருஷ்ணன். நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் இதன் போர்ட்ஃபோலியோவில் சற்று அதிகமாக இருப்பதால், சந்தை காளையின் பிடியில் இருக்கும்போது நிஃப்டியைவிட நல்ல மார்ஜினில் வருமானத்தைத் தரும். அதேசமயத்தில், சந்தை தற்சமயத்தைப் போன்று கரடியின் பிடியில் இருக்கும்போது நிஃப்டியை ஒட்டி அல்லது சற்று குறைவாக இதன் வருமானம் இருக்கும்.
41 முதல் 50 வயதினருக்கு::::::::::::::::::::::
இந்த கேட்டகிரியில் உள்ளோருக்குக் குழந்தைகள் பள்ளி இறுதி வகுப்புகளில் அல்லது கல்லூரியில் இருப்பார்கள். நினைத்தளவு செலவு செய்யவோ அல்லது சேமிக்கவோ முடியாது. ஆனால், அவர்களுடைய தேவைகளுக்காகச் செய்யும் முதலீட்டிற்கு நீண்டகால அடிப்படையில் ஒரு நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பார்கள். இந்த வகையினர் முழுவதுமாகப் பெரிய நிறுவனப் பங்குகளிலேயே முதலீடு செய்யக்கூடிய லார்ஜ் கேப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்த வயதினருக்கு ஏற்ற ஃபண்டுகள் இனி:
ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட்;
தொடர்ச்சியாக ஒரு நிலையான செயல்பாட்டைக் கொண்ட ஃபண்டைத் தேடுபவர்களுக்கு, இது ஒரு நல்ல திட்டமாகும். இந்த வயதினர் மட்டுமல்லாது, அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாமல், அதேசமயத்தில் 100% பங்கு முதலீட்டை நாடுபவர்களுக்கும் இது ஒரு நல்ல ஃபண்டாகும். நன்றாகச் செயல்பட்டு வரக்கூடிய, நீண்டகால டிராக் கொண்ட வெகுசில ஃபண்டுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கடந்த ஓராண்டு கால ரிட்டர்ன் (7.74%) நிஃப்டியைவிட (9.39%) சற்று குறைவு என்றாலும், அது நீண்டகால நோக்கில் கவலைப்படக்கூடிய விஷயமில்லை. இதன் போர்ட்ஃபோலியோ மிகவும் கச்சிதமாக 41 பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது.

யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்;
இந்த ஃபண்டின் மேனேஜர் அனூப் பாஸ்கர் ஆவார். இதன் போர்ட்ஃபோலியோவில் 83 சத விகிதத்துக்கும் அதிகமாகப் பெரிய நிறுவனப் பங்குகள் உள்ளன. எஃப்.எம்.சி.ஜி துறை இதன் இரண்டாவது பெரிய ஹோல்டிங். இதன் போர்ட்ஃபோலியோவும் கச்சிதமாக 42 பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. இந்த ஃபண்டின் கடந்த ஓராண்டுகால ரிட்டர்ன்ஸ் (6.4%) நிஃப்டி ரிட்டர்ன்ஸைவிட (9.39%) குறைவே. இதை ஒரு குறுகியகால பின்னடைவாகக் கருதலாம். இதன் நீண்டகால செயல்பாடு நன்றாகவே உள்ளது. ஐ.டி.சி. இதன் டாப் ஹோல்டிங் ஆகும். குறைந்த ரிஸ்க்கில் பங்கு சார்ந்த முதலீட்டை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும்.

51 முதல் 60 வயதினருக்கு:::::::::::
இந்த குரூப்பில் உள்ளவர்கள், தங்களது ஓய்வுக்காலத்தை எதிர்நோக்கி இருக்கக் கூடியவர்கள். மேலும், குழந்தைகளின் திருமணங்கள் இந்தப் பருவத்தில்தான் பெரும்பாலும் நடைபெறும். இவர்களுக்கு ஓய்வுக்காலச் சேமிப்பிற்கு லார்ஜ் கேப் திட்டங்களைவிட சற்று குறைவான ரிஸ்க் உடைய பேலன்ஸ்டு ஃபண்டுகள் சிறந்த முதலீடாக அமையும். பேலன்ஸ்டு ஃபண்டுகள் 70 சதவிகிதத்தைப் பங்கு சார்ந்த முதலீட்டிலும், எஞ்சியதை கடன் சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்கின்றன. இந்த வயதினருக்கு ஏற்ற ஃபண்டுகள் இனி:
பிர்லா சன் லைஃப் 95 ஃபண்ட்;  
இது பேலன்ஸ்டு ஃபண்ட் வகையைச் சார்ந்த திட்டமாகும். இந்த ஃபண்ட் கிட்டத்தட்ட 73% முதலீட்டை பங்குகளிலும், மீதியை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கிறது. நீண்டகால அடிப்படையில் இந்த ஃபண்டின் ரிட்டர்ன்ஸ், 100% பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய திட்டங்களுக்குச் சமமாக இருந்துள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் இந்த ஃபண்டின் ரிட்டர்ன்ஸ் (10.4%) நிஃப்டியைவிட (9.39%) அதிகமாக இருந்துள்ளது பாராட்டுக்குரியது.

ஹெச்.டி.எஃப்.சி புரூடென்ஸ் ஃபண்ட்;
இதுவும் பேலன்ஸ்டு ஃபண்ட் வகையைச் சார்ந்த திட்டமாகும். நாம் இங்கு பரிந்துரை செய்துள்ள ஃபண்டுகளிலேயே மிகவும் அதிகமான சொத்துகளை (ரூ.6,239 கோடி) நிர்வகிக்கும் ஃபண்ட் இதுதான். இதன் ஃபண்ட் மேனேஜர் பிரஷாந்த் ஜெயின். நீண்டகால அடிப்படையில் தொடர்ந்து நல்ல வருமானத்தைக் கொடுத்துள்ளது. ஜனவரி 1994-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், கடந்த 10 வருடத்தில் ஆண்டிற்கு 24.82% வருமானத்தைத் தந்துள்ளது. தனது சொத்தில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பகுதியைப் பங்குகளிலும், மீதியை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கிறது.
கடந்த ஒரு வருடத்தில் இதன் வருவாய் (5.39%) பெஞ்ச்மார்க்கைவிட (8.81%) குறைந்து காணப்பட்டாலும், நீண்டகாலத்தில் இந்த ஃபண்ட் நன்றாகச் செயல்படும் என்பது இதன் கடந்தகால செயல்பாட்டில் இருந்து காணப்படுகிறது.

61 வயதுக்கு மேல்:::::::
61 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும், தாங்கள் இளம் வயதில் செய்த முதலீட்டிலிருந்து, வரும் வருமானத்தை நம்பி இருப்பவர்கள். ஆகவே, இவர்கள் தங்களது முதலீட்டின் மீது ரிஸ்க் எடுக்க முடியாது. மேலும், தாங்கள் செய்திருக்கும் முதலீட்டில் நிரந்தர வருமானம் கிடைக்கவேண்டியதென்பது மிகவும் அவசியம். ஆகவே, இவர்கள் தேவைக்கு ஏற்ப எம்.ஐ.பி., எஃப்.எம்.பி., கிரெடிட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் திட்டங்கள், மற்றும் லிக்விட் / அல்ட்ரா ஷார்ட் டேர்ம் திட்டங்களை நாடிச் செல்லலாம். மாதாந்திர வருமானம் கேரன்டியாக வேண்டும் என நினைப்பவர்கள், மேலும் வருமான வரி வரம்பிற்குள் (ஆண்டிற்கு ரூ.2 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள்) ஃபிக்ஸட் டெபாசிட்களை நாடிச் சென்றுவிடலாம். இந்த வயதினருக்கு ஏற்ற ஃபண்டுகள் இனி:
ரிலையன்ஸ் எம்.ஐ.பி;
இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 20% பங்கு சார்ந்த முதலீடும், மீதி கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீடுமாக உள்ளது. டிசம்பர் 2003-ல் ஆரம்பித்த இத்திட்டம், இதுவரை ஆண்டிற்கு 10.50%-ஐ வருவாயாகத் தந்துள்ளது. மிகக் குறைந்த ரிஸ்க்குடனும், குறைந்த வருமான வரியுடனும் வளர்ச்சியை நாடுபவர்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும். சுத்தமாக ரிஸ்க்கே எடுக்க வேண்டாம் என நினைப்பவர்கள் இத்திட்டத்தை நாடிச் செல்லவேண்டாம்.

ஹெச்.டி.எஃப்.சி. எம்.ஐ.பி. - எல்.டி.பி;
இந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் 22%-ஐ பங்குகளிலும், மீதியை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளது. இதன் டாப் கடன் முதலீடுகள் சுந்தரம் ஃபைனான்ஸ், டாடா பவர், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹிண்டால்கோ போன்ற நிறுவனங்களில் உள்ளது. டிசம்பர் 2003-ல் ஆரம்பித்த இத்திட்டம் இதுவரை ஆண்டிற்கு 10.96% வருமானத்தைத் தந்துள்ளது. நாம் மேலே கூறியதுபோல குறைந்த வருமான வரியுடன் லோ ரிஸ்க் ஆப்ஷன் முதலீட்டை நாடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.
உங்கள் வயதுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உங்கள் முதலீட்டைத் தொடங்கி வெற்றிகாண வாழ்த்துக்கள்!

 நன்றி : நாணயம் விகடன்